பெங்களூருவில் சோகம்... ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு - மேஜையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்!
பெங்களூருவில் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 42 வயது ஊழியர் ஒருவர், திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் மேஜையின் மீதே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் சன்னராயப்பட்டணத்தைச் சேர்ந்த 42 வயதான சந்துரு என்பவர், பெங்களூரு கொட்டிகெரே பகுதியில் உள்ள 'குரு கிரீன்ஸ்' உணவகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் காசாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி காலை 11:40 மணியளவில், உணவகத்தின் மேஜையில் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் சில கணங்களிலேயே அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேஜையின் மீது குப்புறச் சரிந்து விழுந்துள்ளார்.

சந்துரு திடீரென மயங்கி விழுந்ததைப் பார்த்த உணவக சக ஊழியர்கள் உடனடியாக ஓடிவந்து அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்தும், சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரை மீட்க முயன்றனர். இருப்பினும் அவர் சுயநினைவை மீட்கவில்லை.
இதையடுத்து, அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சந்துரு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் முழுவதும் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஹுலிமாவு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
