பெங்களூரில் துயரம்... மனைவியை பீர் பாட்டிலால் குத்திக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

பெங்களூரு விபூதிபுரா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவியைப் பீர் பாட்டிலால் குத்திக் கொன்று விட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விபூதிபுராவைச் சேர்ந்தவர் ராகவேந்திரா (38), ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஸ்ருதி ராகவேந்திரா (30), அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வீட்டுவேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் போது காதலில் விழுந்த இவர்கள், பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஸ்ருதி தனது செல்போனை அடிக்கடி பயன்படுத்திச் சமூக வலைதள வீடியோக்களைப் பார்ப்பதை ராகவேந்திரா கண்டித்துள்ளார். இது தொடர்பாகத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில் நேற்று இரவிலும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராகவேந்திரா, பீர் பாட்டிலால் ஸ்ருதியின் வயிற்றில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சியிலும் குற்ற உணர்ச்சியிலும் ராகவேந்திராவும் வீட்டிற்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நடந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எச்.ஏ.எல் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று இருவரது உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை இழந்துள்ள இவர்களின் இரண்டு குழந்தைகளும் தற்போது தாவணகெரேயில் உள்ள தாத்தா பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். இது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.