பெங்களூரில் சோகம்... ப்ரெண்ட் பைக்கில் ஜாலி ரைடு போன இளம்பெண் லாரி மோதி பலி!
பெங்களூரு அருகே நண்பருடன் பைக்கில் ஜாலி ரைடாக சுற்றுலா சென்ற 23 வயது இளம்பெண் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் நெலமங்களா தாலுக்காவில் உள்ள வீரநஞ்சிபுரா பேரே பகுதி அருகே, கேரளாவைச் சேர்ந்த 23 வயதான அலினா என்பவர் தனது நண்பரான ஆல்பின் என்பவருடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் மீது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த அலினாவும், அவரது நண்பர் ஆல்பினும் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவராயனதுர்கா மலைப் பகுதிக்குச் சென்று மலையேற்றப் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் பெங்களூரு நோக்கி அவர்களது பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
லாரி பைக் மீது மோதிய கோர விபத்தில் பலத்த காயமடைந்த அலினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற ஆல்பினுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த அலினாவும் ஆல்பினும் தங்களது உயர் கல்விக்காகப் பெங்களூரு இந்திராநகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய ஓட்டுநரை அடையாளம் காணவும், அந்த லாரியைக் கண்டறியவும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்த அலினாவின் உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நெலமங்கலா போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
