சென்னையில் சோகம்... 80 அடி ஆழக் கிணற்றைத் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி!

 
கிணறு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே 80 அடி ஆழமுள்ள கிணற்றைத் தூர்வார இறங்கிய தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் சுமார் 80 அடி ஆழமுள்ள பழமையான கிணறு ஒன்றை தூர்வாருவதற்காகத் தொழிலாளர்கள் இருவர் வரவழைக்கப்பட்டனர்.

இதன்பொருட்டு வினோத் மற்றும் பிரபு ஆகிய இரு தொழிலாளர்களும் கிணற்றின் உள்ளே இறங்கித் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கிணற்றின் அடி ஆழத்தில் தேங்கியிருந்த கடுமையான விஷவாயு திடீரென கசிந்து பரவியதால், இருவருக்கும் அடுத்தடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிணற்றின் உள்ளேயே மயங்கி விழுந்தனர். கிணற்றுக்குள் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் மேலே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர், உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கயிறுகளின் உதவியுடன் 80 அடி ஆழக் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட வினோத் என்பவரைப் பரிசோதித்த முதலுதவிக் குழுவினர், அவர் ஏற்கனவே கிணற்றுக்குள்ளேயே விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மற்றொரு தொழிலாளியான 45 வயது மதிக்கத்தக்க பிரபு என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பிரபுவும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே கிணற்றில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கூடுவாஞ்சேரி குடியிருப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்களைக் கிணற்றில் இறக்கினரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.