சென்னையில் சோகம்.. மனைவி இறந்த 1 மணி நேரத்தில் கணவன் பலி!
சென்னை திருவொற்றியூரில் 46 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த முதிய தம்பதியினர், மனைவியின் மறைவைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கணவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பக்கிரி (75) மற்றும் குப்புலட்சுமி (68) தம்பதியினர், கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டு அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

பக்கிரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனைக்குச் சென்று கணவரைப் பார்க்கத் தயாராகி வந்த குப்புலட்சுமி திடீரென வீட்டில் மயங்கி உயிரிழந்தார். மனைவி இறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பக்கிரியும் உயிர் துறந்தார்.
வாழ்நாள் முழுவதும் பிரியாமல் வாழ்ந்த இந்தத் தம்பதியினர் மரணத்திலும் ஒரே மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்த சோகச் சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
