கோவையில் துயரம்... குட்டையில் மூழ்கிய இளைஞரைக் காப்பாற்ற முயன்ற தாயும், சகோதரியும் உயிரிழப்பு!
கோவை மாவட்டம் காரமடை அருகே பண்ணைக் குட்டையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட இளைஞரைக் காப்பாற்ற முயன்ற தாயும், சகோதரியும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிமாதையனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மனைவி ராஜாமணி (50). இவரது மகள் விக்னேஸ்வரி (35) சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், விடுமுறைக்காகத் தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இன்று மதியம் விவசாய நிலத்தில் உள்ள 12 அடி ஆழப் பண்ணைக் குட்டையில் ராஜாமணியின் மகன் சரவணகுமார் (30) குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியபடி கூச்சலிட்டுள்ளார்.

மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் ராஜாமணி, அவனைக் காப்பாற்றக் கை நீட்டியபோது தவறி குட்டையில் விழுந்தார். தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற ஓடிவந்த சகோதரி விக்னேஸ்வரியும் எதிர்பாராதவிதமாக நீரில் தவறி விழுந்து மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டுச் சோதித்தபோது தாய் ராஜாமணியும், மகள் விக்னேஸ்வரியும் உயிரிழந்தது தெரியவந்தது.
உயிருக்குப் போராடிய மகன் சரவணகுமார் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் காரமடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
