கேரளாவில் துயரம்... தண்டவாளத்தைக் கடந்த தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி பலி!
தமிழக-கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு வாளையார் அருகே நேற்றிரவு ரயில் மோதியதில் தாய் யானையும் அதன் குட்டியும் பரிதாபமாக உயிரிழந்தன. வாளையார் அருகே உள்ள சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் நேற்றிரவு சுமார் 11:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
தாய் யானை தனது குட்டியுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியில் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக அவற்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு யானைகளும் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகின. தகவலறிந்து வந்த ரயில்வே மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் யானைகளின் உடல்களைப் பத்திரமாக மீட்டனர்.
மதுக்கரை வனப்பகுதியில் உள்ள 'பி' டிராக் வளைவாகவும், பாலத்தைக் கொண்டதாகவும் இருப்பதால், லோகோ பைலட்டால் யானைகளை உடனே பார்த்து ரயிலின் வேகத்தைக் குறைக்க முடியாமல் போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழக வனப்பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் 'ஏ' மற்றும் 'பி' ரயில் தடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன் கேமராக்கள் நிறுவப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இத்தொழில்நுட்பத்தால் யானைகள் ரயிலில் அடிபடுவது பெருமளவில் தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், கேரள வனத்துறையும் எல்லைப் பகுதிகளில் ஏஐ கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யானைகளின் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உலக யானைகள் தினமான நேற்றைய தினமே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
