தமிழகமே சோகம்... தமிழக மீனவர்கள் 9 பேரின் சடலங்கள் ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியது - காசிமேட்டில் உறவினர்கள் போராட்டம்!

 
மீனவர்கள் போராட்டம்

சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான 9 தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களின் சடலங்கள் ஆந்திர மாநிலக் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சூர்யா எனும் மீனவர் உட்பட 9 மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 7 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், படகில் டீசல் நிரப்புவதற்காகக் கடந்த அக்டோபர் 29-ம் தேதி கரைக்கு வந்து விட்டு, மீண்டும் கடலுக்குள் சென்றனர்.

முரசு

நடுக்கடலில் நிஜாம்பட்டினம் துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக படகின் எஞ்சினில் பழுது ஏற்பட்டு நின்றுள்ளது. அந்த சமயத்தில் 'முரசு' புயலின் காரணமாக பலத்தக் காற்றும் ராட்சத அலைகளும் வீசியதில், கட்டுப்பாட்டை இழந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகிலிருந்த 9 மீனவர்களும் கடலில் மூழ்கி மாயமாகினர்.

மாயமான மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தபட்டினம் அருகே கடற்கரையில் 9 பேரின் சடலங்களும் அடுத்தடுத்துக் கரை ஒதுங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கரை ஒதுங்கிய சடலங்கள் காசிமேட்டிலிருந்து சென்ற 9 மீனவர்களின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து சென்னை காசிமேடு மீன்பிடிப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஆற்றில் மூழ்கி

கடலில் மாயமான மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து மீட்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் காசிமேட்டில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான தேடுதல் வேட்டை நடத்தாத அரசைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பி வரும் உறவினர்களைக் காவல்துறையினர் சமாதானப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.