கிர் காடுகளில் சோகம்... 10 நாட்களில் 7 ஆசியச் சிங்கங்கள் உயிரிழப்பு!

 
சிங்கம் சிங்கம்

இந்தியாவில் ஆசியச் சிங்கங்களின் ஒரே புகலிடமாக விளங்கும் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப் பூங்கா மற்றும் வனப்பகுதியில், சிங்கங்களின் அடுத்தடுத்த மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 7 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மரணமடைந்த சிங்கங்களில் 4 குட்டிகளும், 3 பெரிய சிங்கங்களும் அடங்கும்.

சிங்கங்களின் மரணம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ள வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்த விபரங்களைப் பகிர்ந்துள்ளார்.

உயிரிழந்த 4 சிங்கக் குட்டிகளுக்கு 'பேபீசியா' எனப்படும் ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் தொற்றானது சிங்கங்களின் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களை மிகக் கொடூரமாகப் பாதித்து, கடுமையான இரத்த சோகையை ஏற்படுத்தி இறுதியில் மரண வழிவகுக்கும் தன்மை கொண்டது. உண்ணிகள் மூலமாக வனவிலங்குகளுக்கு இந்தத் தொற்று பரவுகிறது.

சிங்கம்

அதே வேளையில், உயிரிழந்த எஞ்சிய 3 பெரிய சிங்கங்களும் வயது முதிர்வு அல்லது காடுகளுக்குள் ஏற்படும் பிற இயற்கை காரணங்களால் இறந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுண்ணித் தொற்று மேலும் பரவாமல் தடுக்க குஜராத் மாநில வனத்துறை போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:

தொற்று பாதிப்பு அறிகுறி உள்ள மற்றும் அதனுடன் தொடர்பில் இருந்த 17 சிங்கங்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுக் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்கு மருத்துவக் குழுவினர் அவர்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

ஆண் சிங்கம்

உயிரிழந்த சிங்கங்களின் உள் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகப் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் அல்லது விசேஷப் பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே ஒட்டுண்ணித் தொற்றின் தீவிரம் குறித்து முழுமையாக அறிய முடியும். ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதில் இந்தியா உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கும் சூழலில், கிர் காடுகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தொற்று பாதிப்பு சர்வதேச வனவிலங்கு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.