தூத்துக்குடியில் சோகம்... பேருந்து விபத்தில் ஓட்டுநர் பலி; 9 பயணிகள் படுகாயம்!

 
பேருந்து விபத்து பேருந்து விபத்து

தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பேருந்தைச் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து (55) என்பவர் ஓட்டி வந்தார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

காலை சுமார் 10 மணி அளவில் பேருந்து மறவன்மடம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய பேருந்து: முதலில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த ஒரு பனைமரத்தின் மீது பலமாக மோதிச் சிதைந்தது. அதன் பின்னரும் நிற்காமல் சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது.

இந்தப் பயங்கர மோதலில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் மணிமுத்து, சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

பேருந்தில் பயணம் செய்தவர்களில் 9 பேர் படுகாயமடைந்தனர். விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை நிலையப் போலீசார், உயிரிழந்த மணிமுத்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்கம்பத்தில் மோதியதால் அந்தப் பகுதியில் மின்சாரம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தின் பிரேக் பலவீனம் அடைந்ததா அல்லது ஓட்டுநருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.