திருவள்ளூரில் சோகம்.. சாலையோர பள்ளத்தில் விழுந்து +2 மாணவி உயிரிழப்பு! லாரி மோத வந்தபோது கொடூரம்!

 
பள்ளத்தில் காவியா பள்ளத்தில் காவியா

திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் அருகே நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகத் தோண்டப்பட்டு, முறையான பாதுகாப்பு எச்சரிக்கைகள் இன்றி விடப்பட்ட பள்ளத்தில் விழுந்து 16 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவியா

திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கபுரம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவரது மகள் காவியா (16), திருவள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை காவியா தனது சகோதரன் பிரவீனுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். பூண்டி அடுத்த ஒதப்பை பகுதியில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே ஒரு லாரி மிக அதிவேகமாக மோத வருவது போல் வந்துள்ளது. லாரியிடமிருந்து தப்பிக்க முயன்றபோது நிலைதடுமாறிய வாகனம், சாலையோரம் விரிவாக்கப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் காவியாவிற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காவியாவைத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே காவியா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சகோதரன் பிரவீன் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளி மானவி தற்கொலை

திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையே நடைபெறும் இந்த நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகளில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்: பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் போதிய மின்விளக்கு வசதிகளோ அல்லது பிரதிபலிக்கும் எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை.  லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் இத்தகைய பள்ளங்களில் விழும் அபாயம் தொடர்கிறது.

இந்த விபத்து குறித்துப் பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காவியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.