திருவாரூரில் சோகம்... வாய்க்காலில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம்!
திருவாரூர் மாவட்டம் வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
வடகண்டம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், இன்று தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுள்ளார். விசேஷ வழிபாடு மற்றும் தரிசனத்தை முடித்துவிட்டு, மாலை அவர்கள் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருவாரூர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாகச் செல்வத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வாய்க்காலில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரின் கண்ணாடிகள் உடைந்த நிலையில், உள்ளே இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரில் இருந்த செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேரும் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்காலில் விழுந்த கார் மீட்கப்பட்டது.
