திருவாரூரில் சோகம்... வயல்வெளியில் மின்னல் தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே பலி!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயலில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிய பெண் தொழிலாளி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த முத்தம்மாள் (55) என்ற பெண் கூலித் தொழிலாளி, வயலில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்புவதற்காக வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக முத்தம்மாள் மீது மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முத்தம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகக் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் சூழலில், மின்னல் தாக்கிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
