அரக்கோணம் அருகே சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கணவர் இறந்த சோகத்தில் வாடிய இளம் தாய் தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளி (26) என்பவருக்கும் கோட்டையன் (30) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பரத் (7) மற்றும் சந்தோஷ் (3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தக் குடும்பம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததுடன், கல் உடைக்கும் கூலித் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தது.

வள்ளிக்குக் கணவரான கோட்டையன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புள்ள வள்ளியின் மீது பெரும் சுமை விழுந்துள்ளது.
கணவர் இறந்த துக்கம் மற்றும் வறுமையின் தாக்கத்தால் மனமுடைந்திருந்த வள்ளி, அரக்கோணம் - திருத்தணி ரயில் பாதையில் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற சித்தானூர் ரயில் முன்பு தனது இரண்டு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
