கள்ளக்குறிச்சி அருகே சோகம்.. அரசுப் பேருந்தின் மீது சாய்ந்து விழுந்த உயர் மின்விளக்கு கோபுரம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பலத்த காற்று மற்றும் மழை காரணமாக உயர் மின்விளக்கு கோபுரம் திடீரென அரசுப் பேருந்தின் மீது சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்விளக்கு கோபுரம் திடீரென முறிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் பேருந்தின் மீது கோபுரம் சரிந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு உடனடியாகப் பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓடினர். இச்சம்பவத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
கோபுரம் விழுந்த நேரத்தில் அவ்வழியாகப் பாதசாரிகளோ அல்லது இருசக்கர வாகன ஓட்டிகளோ செல்லாததால், பெரிய அளவிலான உயிர் சேதம் மற்றும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், பேருந்தின் மீது கிடந்த மின் கம்பம் மற்றும் கோபுரத்தை மீட்டு நிலைமையைச் சீர் செய்தனர். மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாகவே பழமையான இக்கோபுரம் சாய்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
