விடுமுறையில் சோகம்... தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி!
நாகப்பட்டினம் அருகே கோடை விடுமுறைக்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்ற இரண்டு சிறுவர்கள், கட்டுமானப் பணியில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆவராணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கலைவாணனின் மகன் பிரவின்சாய் (4) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரையின் மகன் பவன்சாய் (4) ஆகிய இருவருமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். பள்ளி விடுமுறையைக் கழிப்பதற்காகச் சிக்கல்பத்து கிராமத்தில் உள்ள தங்களது தாத்தா, பாட்டி வீட்டிற்கு இந்தச் சிறுவர்கள் வந்திருந்தனர்.

விளையாடச் சென்ற சிறுவர்கள், அருகில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ஒரு வீட்டில் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளனர். விளையாடச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, கட்டுமான வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் மிதந்ததைக் கண்டு உறவினர்கள் கதறித் துடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளாங்கண்ணி காவல்துறையினர், சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க வந்த இடத்தில், நான்கு வயது சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
