விடுமுறை நாளில் துயரம்... கார் ஏரியில் கவிழ்ந்து விபத்து - குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
தசரா தொடர் விடுமுறை நாளில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கார் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சித்தாப்பூர் அருகே உள்ள படகா பனங்கலா பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் விஜேஷ் (36), பமிதா (35) தம்பதியினர் தங்களது 3 வயது மகள் லியாவுடன் வசித்துக் கொண்டு அங்கே பணியாற்றி வந்தனர்.

தசரா விடுமுறை தினமான கடந்த செவ்வாய்க்கிழமையன்று மூவரும் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கூர்மையான வளைவுக்கு அருகில் இருந்த ஏரியில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் காரை மீட்டுப் பார்த்தபோது, அதற்குள் இருந்த விஜேஷ், பமிதா மற்றும் சிறுமி லியா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையின்படி, இரவு நேரத்தில் அப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் தெளிவு குறைந்திருக்கலாம் என்றும், அப்போது ஓட்டுநர் சாலையைக் கவனிக்கத் தவறியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்திருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
