விடுமுறை நாளில் சோகம்... மைக் கல் மீது பைக் மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வாக்களிக்கச் சொந்த ஊர் வந்த இளைஞர்கள் சென்ற பைக் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் நளராஜபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (21), இசக்கிராஜா (20) மற்றும் சிவகாரனேஷ் (19) ஆகிய மூன்று நண்பர்களும் கடந்த 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு வந்துள்ளனர். வாக்களித்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரே பைக்கில் ஊர் திரும்பியுள்ளனர். பைக்கை முத்துப்பாண்டி ஓட்டியுள்ளார்.

ஆழ்வார்திருநகரி அருகே வெள்ளமடம் அரசாங்க நகர் பகுதியில் வந்தபோது, பைக் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோர மைல்கல்லில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் முத்துப்பாண்டி மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த சென்னையில் வேலை பார்த்து வரும் சிவகாரனேஷ், தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள், தேர்தல் கடமையை ஆற்ற ஊருக்கு வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தது நளராஜபுரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
