விடுமுறை நாளில் துயரம்... பெற்றோர்களே உஷார்... சென்னை திருநீர்மலை ஏரியில் குளித்த 4 மாணவ-மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
சென்னை குரோம்பேட்டை திருநீர்மலை பெரிய ஏரியில் விளையாடச் சென்ற போது நீரில் மூழ்கி 4 பள்ளி மாணவ-மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளைக் கண்காணியுங்கள். ஆபத்தான இடங்களில் அவர்களைத் தனியே செல்ல அனுமதிக்காதீர்கள்.
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (10), தேவதர்ஷன் (12), பூஜா (13), குஷி (13) ஆகிய நான்கு பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள திருநீர்மலை பெரிய ஏரிக்குச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிய நிலையில், திங்கட்கிழமை காலை ஏரிப் பகுதியில் 4 பேரின் உடல்களும் நீரில் மிதப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். குரோம்பேட்டை காவல்துறையினர் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் யுவனேஷ் 6-ம் வகுப்பும், தேவதர்ஷன் 7-ம் வகுப்பும், பூஜா மற்றும் குஷி ஆகியோர் 8-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

விடுமுறை நாளில் ஏரியில் குளிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் ஏரியில் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
