சோகம்... பூனை வளர்க்கப் பெற்றோர் சம்மதிக்காததால் இளம் பெண் மருத்துவர் தற்கொலை!

 
இளம்பெண் மருத்துவர் தற்கொலை பூனை இளம்பெண் மருத்துவர் தற்கொலை பூனை

ஐதராபாத்தில் பூனை வளர்க்கப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 23 வயது இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில், செல்லப் பிராணி வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் மருத்துவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

செகந்திராபாத் ரிசாலா பஜார் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் பிரின்சி. இவர் சமீபத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். பிரின்சிக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாகத் தனது வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

வீட்டில் பூனை வளர்ப்பதற்குப் பிரின்சியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 21) மீண்டும் இதே விவகாரத்தில் வீட்டில் பெரிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரின்சி, தனது அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது பிரின்சி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  அல்வால் போலீசார், பிரின்சியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூனை

இது குறித்து பிரின்சியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக "மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை" என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் அழுத்தங்கள் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும்போது அல்லது கடும் மன அழுத்தத்தில் இருக்கும்போது கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன்: 104  சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050