காலையிலேயே சோகம்... சிவகாசி வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், தீவிர சிகிச்சையிலிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த இடத்தில், நேற்று எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து, ஐயப்பராஜா மற்றும் பாண்டித்துரை ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 90 சதவீதத்திற்கு மேல் பலத்த தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சட்டவிரோதமாகப் பட்டாசு ஆலை நடத்தி விபத்திற்குக் காரணமான நில உரிமையாளர் மற்றும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
