இனி டேட்டா தேவையில்லை என்றால் இந்த ரீசார்ஜ் போதும்! TRAI முக்கிய உத்தரவு!
மொபைல் டேட்டாவை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குரல் அழைப்பு மற்றும் SMS சேவைகளை மட்டும் உள்ளடக்கிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
தற்போது பலர் மொபைல் போனில் இணைய வசதியை அதிகமாக பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அழைப்புகள் மற்றும் SMS சேவைகளை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையில்லாத டேட்டா வசதியும் சேர்க்கப்பட்ட திட்டங்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டேட்டா இல்லாமல் குரல் அழைப்பு மற்றும் SMS மட்டும் வழங்கும் Voice & SMS Only Packs-களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என TRAI வலியுறுத்தியுள்ளது. இத்தகைய திட்டங்கள் இணைய சேவை தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை என TRAI தெரிவித்துள்ளது.
மேலும், 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட Voice-SMS திட்டங்களை வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய திட்டத்தையும் வழங்க வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கான திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தங்களுக்கு தேவையான சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக டேட்டா பயன்படுத்தாதவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்ய முடியும்.TRAI-யின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, Voice மற்றும் SMS மட்டும் வழங்கும் prepaid திட்டங்களுக்கு அதிகபட்சமாக 365 நாட்கள் வரை வேலிடிட்டி இருக்கலாம்.
Jio, Airtel, Vodafone Idea உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது தற்போதைய கட்டணத் திட்டங்களை புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் தங்களுக்குத் தேவையான மொபைல் சேவையை பெறுவதற்கான கூடுதல் தேர்வு கிடைக்க உள்ளது.
