2 பயணிகள் ரயில்கள் பயங்கரமாக மோதி கோர விபத்து... ஒருவர் பலி, 90 பேர் படுகாயம்!
இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் அருகே விபரீதமான கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி கார்பி நகரில் இருந்து செயின்ட் பான்க்ராஸ் நோக்கிப் பயணிகள் பலரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. அந்த ரயில் பெட்ஃபோர்டு பகுதிக்குத் தெற்கே சரியாக 2 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த போது விபத்து நேரிட்டுள்ளது.
அப்போது நாட்டிங்ஹாம் நகரில் இருந்து செயின்ட் பான்க்ராஸ் நோக்கி அதே பாதையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் பின்பகுதியில் இந்த ரயில் மிகக் கொடூரமாக மோதியுள்ளது. இந்த அதிபயங்கர மோதலின் தாக்கத்தில் இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டுத் தூக்கி வீசப்பட்டு முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தன. ரயிலுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அலறியடித்துக் கூச்சலிட்டனர்.
இந்த கோர சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பயணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மொத்தம் 90 பயணிகள் இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டனர். படுகாயமடைந்த 90 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
