ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு கி.மீ படி 25% உயர்த்தி உத்தரவு.. முன் தேதியிட்டு அமல்!
நீண்ட நாட்களாக இன்ஜின் டிரைவர் சங்கங்கள் விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, ரயில்வே வாரியம், கிலோ மீட்டர் படி 25% உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த 2024 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 50 சதவீதத்தை எட்டியது. அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தொடும்போது, ஊழியர்களுக்கான இதர படிகளும் குறிப்பிட்ட விகிதத்தில் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதி. இதன் அடிப்படையில், மற்ற ரயில்வே ஊழியர்களுக்குப் பயணப்படி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இன்ஜின் டிரைவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை கிலோ மீட்டர் படியில் இருந்து 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1, 2024 முதல் கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து லோகோ பைலட்டுகளும் இதன் மூலம் பயன்பெறுவர்.

தங்களுக்கான கிலோ மீட்டர் படியை உயர்த்தக் கோரி பல்வேறு லோகோ பைலட் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தன. ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பு அவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
