இன்று முதல் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை குறைப்பு!

 
மின்சார ரயில்

எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் மேம்பால அடித்தளப் பணிகள் காரணமாக, ஏற்கனவே 204 ஆக இருந்த ரயில் சேவைகள் 164 ஆகக் குறைக்கப்பட்டிருந்தன. தற்போது ரயில்கள் தாமதமாவதைத் தவிர்க்கவும், சேவையைச் சீரமைக்கவும் இந்த எண்ணிக்கை மேலும் 115 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 58 சேவைகளும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே 57 சேவைகளும் என மொத்தம் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் பீக் அவர்ஸ் (Peak Hours) அல்லாத நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ஏ.சி. மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்

திருமால்பூர் - அரக்கோணம் மற்றும் கடற்கரை - அரக்கோணம் விரைவு மின்சார ரயில்கள் இனி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட ரயில், திங்கள் முதல் சனி வரை செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும். சில ரயில்கள் எழும்பூர் - கூடுவாஞ்சேரி மற்றும் எழும்பூர் - செங்கல்பட்டு இடையே மட்டுமே இயக்கப்படும்.

மின்சார ரயில்

ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 மற்றும் 6-வது நடைமேடைகள் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால், சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு ரயில்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இந்த நெரிசலைக் குறைத்து ரயில்களைச் சீராக இயக்கவே இந்த அதிரடி முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி வரை இந்தப் பாதிப்பு நீடிக்கும் என்பதால், பயணிகள் தங்களது பயண நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.