பயங்கரம்... மது போதையில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர் மீது ஏறிய எக்ஸ்பிரஸ் ரயில்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே மது போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் ஒருவர், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்முத்து என்ற 22 வயது இளைஞர், மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் ஆறுமுகநேரி - காயல்பட்டினம் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிவிட்டார்.

சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை அந்தப் பகுதியைக் கடந்து சென்றது. அப்போது தண்டவாளத்தில் வாலிபர் படுத்திருப்பதை கவனிக்க முடியாததால், ரயில் அவர் மீது பயங்கரமாக ஏறி இறங்கியது. இதில் அருள்முத்துவின் உடல் துண்டு துண்டாக சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் அந்த வழியாகச் சென்ற மக்கள் தண்டவாளத்தில் உடல் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் அருள்முத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையால் ஒரு இளைஞரின் உயிர் அநியாயமாகப் பறிபோனது அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் மது அருந்துவதும், அங்கே உறங்குவதும் உயிரைப் பறிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
