சென்னை ரயில் நிலையங்களில் 20 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் திறப்பு!

 
ரயில் ரயில்

சென்னை கோட்ட ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் வசதிகளை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை கோட்டம் முழுவதும் புதிதாக 20 வாகன நிறுத்துமிடங்கள் பயன்பாட்டிற்குத் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் சென்னை பிரிவில் உள்ள மொத்த வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை 106-லிருந்து 126-ஆக உயர்ந்துள்ளது, இது ரயில் நிலையங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்டலூர், பொத்தேரி, ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இந்தப் புதிய நிறுத்துமிடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சுமார் 820 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன பலதள வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டுத் தடையின்றி ரயில்களில் பயணம் செய்ய இந்த வசதி பேருதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரக்கோணம், மீனம்பாக்கம் உட்பட 7 ரயில் நிலையங்களில் விரைவில் வாகனங்களை  நிறுத்தும் வசதி: ஒப்பந்ததாரர்கள் தேர்வு பணி தீவிரம்

அம்ரித் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய நிறுத்துமிடங்களில் பல்வேறு நவீன வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் அடிப்படையிலான டிக்கெட் முறை, யுபிஐ மூலமான பணப் பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் இதில் அடங்கும். இதன் மூலம் வாகன நிறுத்துமிடங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, பயணிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த மக்கள் நலத் திட்டங்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.