பயணிகள் கவனத்திற்கு... தென்மாவட்ட ரயில்கள் சேவையில் மாற்றம்!
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மிக முக்கியமான ‘யார்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள்’ தீவிரமாக நடைபெற உள்ளன. இதன் காரணமாக, வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்களின் சேவைகளில் தற்காலிகமாகப் பல மாற்றங்களைச் தெற்கு ரயில்வே செய்துள்ளதாகத் திணகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தென்மாவட்டங்கள் வழியே செல்லும் பல ரயில்கள் தங்களது வழக்கமான தடத்தில் செல்லாமல் மாற்றுப் பாதைகளில் சுற்றி இயக்கப்பட உள்ளதால், அவை சில முக்கிய ரயில் நிலையங்களுக்குச் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, செங்கோட்டை - ஈரோடு ரயில்களும், தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில்களும் இந்தத் தற்காலிக மாற்றத்தால் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லாது. அதேபோல், திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலானது திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ஸ்டேஷன்களுக்குச் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னையில் இருந்து இயக்கப்படும் சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களைத் தவிர்க்கவுள்ளது.

இதேபோல், பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் திருநெல்வேலி, கோவில்பட்டி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் ஆகிய நிலையங்களுக்குச் செல்லாது. ஒரு சில குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் சில நாட்களில் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல இயங்கும் என்பதால், தென்மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் தங்களது ரயில்களின் தற்போதைய இயக்க நிலையை ரயில்வே இணையதளத்தில் முன்கூட்டியே சரிபார்த்துவிட்டுப் பயணத்தைத் தொடங்குமாறு தெற்கு ரயில்வே பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
