29 ரயில்கள் முழுமையாக ரத்து... பராமரிப்புப் பணியால் பயணிகள் கடும் அவதி!

 
ரத்து

நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு மற்றும் முக்கியப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்தப் பாதையில் இயக்கப்படும் பல்வேறு இரயில் சேவைகளில் தென்னக இரயில்வே சார்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் மாற்றங்களால் தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரயில்

இதன் ஒரு பகுதியாக நெல்லை முதல் திருச்செந்தூர் வரை செல்லும் பயணிகள் இரயில்கள் மற்றும் மறுமார்க்கமாக திருச்செந்தூரிலிருந்து நெல்லை வரும் இரயில்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இரயில்கள் உள்பட மொத்தம் 29 இரயில்கள் நேற்று முழுமையாக ரத்து செய்யப்பட்டன. இது தவிர மேலும் 26 இரயில்கள் குறிப்பிட்ட சில தூரங்கள் மட்டுமே இயக்கப்பட்டுப் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்

புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை செல்லும் இரயில் மற்றும் கோவை முதல் நாகர்கோவில் வரை செல்லும் இரயில்கள் விருதுநகர், திண்டுக்கல், மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்பட்டன. திருச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையே செல்லும் விரைவு இரயில் வழக்கமான நேரத்தை விட 1 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாகக் காலை 8.30 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இதேபோல மற்ற சில முக்கிய விரைவு இரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் இரயில் நிலையங்களிலேயே நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.