சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 மின்சார ரயில்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து!
சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகச் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் 8 மின்சார ரயில்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, ஜூலை 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரையில் இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையின்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30 மற்றும் 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டுச் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் இயக்கப்பட மாட்டாது. அதேபோல் மறுமார்க்கமாகச் செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, மாலை 3 மற்றும் 4.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டுச் சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தினசரிப் பயணிகளின் வசதிக்காகச் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கமாகத் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.30, மாலை 3.15, 4 மற்றும் 5.24 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பதால் பயணிகள் இதற்கேற்பத் தங்களின் பயணங்களைத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
