கடன் சுமை தாங்க முடியல... ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!
திருவண்ணாமலையை அடுத்த நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரகுமார் மற்றும் அவரது மனைவி சிந்து ஆகிய இருவரும் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான சந்திரகுமார் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர் ஆவார். இவருடைய மனைவி 38 வயதான சிந்து என்பதும், இந்தத் தம்பதியருக்குப் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மகன் உள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரகுமாருக்கு நீண்ட நாள்களாக நுரையீரல் தொற்றுநோய் பாதிப்பு இருந்ததால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சைக்குப் பின் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் தனிமையில் ஆலோசித்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தொடர்வண்டித் துறை காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாரத்தில் உள்ள வடமாதிமங்கலம் தொடர்வண்டி நிலையத்திற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது நஸ்ராபூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தொடர்வண்டியின் முன்பாக இருவரும் திடீரெனப் பாய்ந்து தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சந்திரகுமாரின் சட்டைப்பையிலிருந்து ஒரு உருக்கமான கடிதத்தைக் காவல் துறையினர் கைப்பற்றிப் படித்துப் பார்த்துள்ளனர். அந்தத் தற்கொலைக் கடிதத்தில் தமக்கு நீண்ட நாள்களாக இருந்த நுரையீரல் நோய் பாதிப்பால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குடும்பத்தின் கடன் சுமை மேலும் அதிகரித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே தாங்கள் இந்த விபரீத முடிவை எடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தொடர்வண்டித் துறை காவல் துறையினர் முறைப்படி வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
