ஓடும் ரயிலில் AC பெட்டிக்குள் அகல்விளக்கு ஏற்றிப் பூஜை செய்த பயணி ... அதிர வைக்கும் வீடியோ!
ஓடிக் கொண்டிருந்த ரயிலின் குளிர்சாதன பெட்டிக்குள் பயணி ஒருவர் அகல்விளக்கு ஏற்றிப் பூஜை செய்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் சம்பந்தப்பட்ட பயணி குளிர்சாதன பெட்டிக்குள்ளேயே தீக்குச்சியைக் கொளுத்தி அகல்விளக்கு மற்றும் ஊதுபத்திகளை ஏற்றி வைத்துப் தீவிரமாக வழிபாடு செய்துள்ளார். இந்த ஆபத்தான வழிபாட்டு நிகழ்வை அங்கிருந்த மற்ற பயணிகள் தங்களது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் ஓடும் ரயிலில் தீப்பற்றும் வகையில் நடத்தப்பட்ட இந்த விபரீத செயல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முழுமையாக மூடப்பட்ட குளிர்சாதன பெட்டிக்குள் ஏதேனும் எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றினால் மிகப்பெரிய அளவிலான அசம்பாவிதம் மற்றும் தீ விபத்து நேரிட்டிருக்கும். ரயில் பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் பொறுப்பற்ற முறையில் பயணி செயல்பட்டது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதும், தீ மூட்டுவதும் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இரக்கமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட பயணி யார், அவர் எந்த ரயிலில் எந்தப் பாதையில் பயணித்தார் என்பது குறித்த விவரங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிரமாகச் சேகரித்து வருகின்றனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பயணியைக் கண்டறிந்து அவர் மீது சட்டப்படி கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
