சென்டிரல் - சூலூர்பேட்டை உட்பட பயணிகள் ரயில்கள் ரத்து... தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா - நாயுடுபேட்டை இடையே இன்று வியாழக்கிழமை மற்றும் வரும் 5ஆம் தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகப் பயணிகள் ரயில் சேவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகச் சென்னை சென்டிரலில் இருந்து காலை 7.45 மணிக்குப் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும், மறுமார்க்கமாகச் சூலூர்பேட்டையில் மாலை 6.40 மணிக்குப் புறப்பட்டுச் சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு நெல்லூர் செல்லும் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் சூலூர்பேட்டை வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.25 மணிக்குப் புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரயிலும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்களால் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
