பதிவுத்துறையில் 7 மாவட்ட பதிவாளர்கள், 43 சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம்!
தமிழக பதிவுத்துறையில் பல்வேறு மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 7 மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் 43 சார்பதிவாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வணிக வரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் குமரகுருபரன் மற்றும் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ளனர்.

இந்த உத்தரவின்படி, சென்னை வடக்கு தணிக்கை மாவட்டப் பதிவாளர் சீதாலட்சுமி தாம்பரம் நிர்வாக மாவட்டப் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் தணிக்கை மாவட்டப் பதிவாளர் சுனிதா அம்பத்தூர் சார்பதிவாளராகவும், திண்டுக்கல் தணிக்கை மாவட்டப் பதிவாளர் பெரியசாமி கோவை இணை சார்பதிவாளர் 1 ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் காரைக்குடி மாவட்டப் பதிவாளர் இயலரசி திருச்சி இணை சார்பதிவாளர் 1 ஆகவும், தஞ்சாவூர் தணிக்கை மாவட்டப் பதிவாளர் செந்தில்நாதன் திருச்சி தணிக்கை மாவட்டப் பதிவாளராகவும் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
இதேபோல் சார்பதிவாளர்கள் மட்டத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோபிச்செட்டிபாளையம் இணை 1 சார்பதிவாளர் ராஜமுனியப்பன் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளராகவும், கோவை வடவள்ளி சார்பதிவாளர் கிருஷ்ணசாமி ஆவடி சார்பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். குன்றத்தூர் சார்பதிவாளர் கண்ணன் வேளச்சேரிக்கும், நீலாங்கரை சார்பதிவாளர் சண்முகம் தென் சென்னை சீட்டு மற்றும் சங்கப் பிரிவிற்கும் மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் 43 சார்பதிவாளர்கள் புதிய இடங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
