பெண் முகவரின் காருக்குத் தீ வைத்த காவலர்... பணியிடமாற்றம்!

 
car

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே வசித்து வரும் கணவனை இழந்த பெண் ஒருவர் காப்பீட்டு நிறுவன முகவராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் என்ற காவலர் தவறான நோக்கத்தில் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் காவலரின் அழைப்புகளை ஏற்க மறுத்து உரையாடுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் சத்தியராஜ், அந்தப் பெண் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரைக் கொளுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிரான்ஸ்பர்

காவலர் கொளுத்திய தீ வேகமாகப் பரவியதில், அந்தப் பெண்ணின் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அதுமட்டுமன்றி, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு நபரின் காரும் தீப்பற்றி எரிந்து சேதத்திற்கு உள்ளானது. நள்ளிரவில் கார் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் காவலர் சத்தியராஜ் மீது குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட காவலர் சத்தியராஜை உடனடியாக ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். காவலர் ஒருவரே பெண் முகவரின் காருக்குத் தீ வைத்த சம்பவம் காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.