சபரிமலை செல்ல திருநங்கைக்கு அனுமதி மறுப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு!
ஆவணி மாத பூஜையை முன்னிட்டுச் சபரிமலை செல்ல முயன்ற திருநங்கை வழக்கறிஞருக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து, அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா, ஆவணி மாத பூஜையையொட்டிச் சபரிமலைக்குச் செல்ல முயன்றபோது பம்பை பகுதியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகத் தான் இருமுறை சபரிமலை தரிசனம் செய்துள்ளதாகவும், தற்போது திருநங்கை எனக் குறிப்பிட்டுத் தனக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருநங்கைகளும் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்டப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
