களைகட்டும் திருவிழா... இன்று திருநங்கைகள் அழகிப் போட்டி!

 
திருநங்கைகள் திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த விழாவையொட்டி விழுப்புரம் நகரில் ஆண்டுதோறும் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அழகிப் போட்டிகள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான "மிஸ் திருநங்கை 2026" அழகிப் போட்டி இன்று ஏப்ரல் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெறுகிறது.

மிஸ் சென்னை திருநங்கை

இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இன்று மாலை நடைபெறும் அழகிப் போட்டியில் ஒய்யார நடை, ஆடை அலங்காரம் மற்றும் பொது அறிவுத்திறன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்குப் பட்டங்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

 திருநங்கை

முன்னதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இந்தப் போட்டி குறித்த விவரங்களை வெளியிட்டனர். திருநங்கைகளின் கலைத் திறமையை வெளிப்படுத்தவும் அவர்களுக்குச் சமூக அங்கீகாரம் பெற்றுத் தரவும் இந்த மேடை பயன்படுத்தப்படுகிறது. நாளை கூவாகம் கோவிலில் தாலி கட்டும் நிகழ்வும் அதைத் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளதால் விழுப்புரத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.