வெளிப்படைத்தன்மை: டெண்டர் விபரங்களை முழுமையாக ஆராய 3 புதிய குழுக்கள் அமைப்பு - அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!
தமிழக மின்சாரத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், டெண்டர் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய தவெக அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, மின் துறையின் முந்தைய மற்றும் இனி வரவிருக்கும் டெண்டர் விபரங்களை மிகத் துல்லியமாக ஆராய்வதற்காக 3 புதிய உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரத் துறையின் தற்போதைய நிதி நிலைமை, மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதைத் தடுக்கவும், டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் ஏதுமின்றி நேர்மையான வழியைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, மின்சாரத் துறையின் ஒட்டுமொத்த டெண்டர் நடைமுறைகளையும் தீவிரமாகச் சரிபார்க்க 3 புதிய குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 குழுக்களும் மின் துறையின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி சார்ந்த வரவு செலவு விபரங்களை மிக ஆழமாக ஆய்வு செய்யும் வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் மின்சாரத் துறை சார்பில் எந்தவொரு புதிய திட்டத்திற்கு டெண்டர் கோரப்படுவதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக இந்த 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கை மற்றும் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழுக்களின் பச்சைக்கொடி காட்டிய பிறகே அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்புகள் வெளியில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்னும் சில வாரங்களில் தங்களது முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடரைச் சந்திக்கத் தயாராகி வரும் வேளையில், மின்சாரத் துறையில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, டெண்டர் நடைமுறைகளை முறைப்படுத்த அமைச்சர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
