மின்சார ரயிலில் கைப்பையில் உயிருள்ள கோழியுடன் பயணம் ... வைரல் வீடியோவால் மும்பையில் பரபரப்பு!
மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் தனது கைப்பையினுள் உயிருள்ள கோழி ஒன்றை மறைத்து வைத்துப் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போரிவிலியில் இருந்து சர்ச்கேட் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக லோக்கல் ரயில்களில் மக்கள் கூட்டமே அலைமோதும் நிலையில், அந்தப் பெண்ணின் கைப்பையினுள் இருந்த கோழிக்கு அருகில் இருந்த மற்றொரு பயணி உணவளித்தது அங்கிருந்தவர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
What the hell is this. How is this even allowed god damn it. That too in a normal compartment of a local train. Kindly take strict action against this. I am on Churchgate bound 6:01 train boarded from Borivali @WesternRly @MumbaiPolice pic.twitter.com/vuKEz57CBC
— Aditya Mehta (@portfoliobhaiya) April 20, 2026
சக பயணி ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "பொதுமக்கள் பயணிக்கும் ரயிலில் இது போன்ற செயல்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?" என்று காட்டமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆனதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினர் உடனடியாக இதற்குப் பதிலளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே காவல்துறைக்கு மும்பை போலீஸ் உத்தரவிட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்தபோது அந்த கோழி யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை என்றாலும், பொதுப் போக்குவரத்தில் முறையான அனுமதியின்றி உயிருள்ள விலங்குகள் மற்றும் பறவைகளைக் கொண்டு செல்வது விதிமுறை மீறல் என்பதால் இது விவாதப் பொருளாகியுள்ளது. மும்பை ரயில்களில் இது போன்ற விசித்திரமான மற்றும் விதிமீறல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
