"திருச்சி திமுக மாநாடு தான் மெயின் பிக்சர்" - 10 லட்சம் நிர்வாகிகளைத் திரட்ட கே.என்.நேரு அறிவுறுத்தல்!

 
நேரு

திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாடு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு 'மெயின் பிக்சர்' போல அமையும் என்று திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். 

மார்ச் 9ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு குறித்து, அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக இளைஞரணி சந்திப்பு, மகளிர் மாநாடு எனப் பல களப்பணிகள் அசுர வேகத்தில் நடந்தாலும், திருச்சி மாநாடுதான் வரவிருக்கும் தேர்தலுக்கான உண்மையான பலத்தைக் காட்டும் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கே.என்.நேரு

இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ளும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை முடிக்கும் வரை ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் இருந்து கடைசி வாகனம் கிளம்பிய பிறகே மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டிற்குப் புறப்பட வேண்டும். வாகன விவரங்களை மார்ச் 1ம் தேதிக்குள் தலைமைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிளைக் கழகம் முதல் மாநில நிர்வாகிகள் வரை ஒருவர்கூட விடுபடாமல் இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கே.என்.நேரு

"கரைபுரண்டு ஓடும் காவிரியாய் திருச்சியில் திரள்வோம்; ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்கச் சூளுரைப்போம்" என்று கூறியுள்ள அவர், இந்த மாநாடு இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்யும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதே தலைமைக்கழகத்தின் விருப்பமாக உள்ளது.