திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு

 
திருச்சி

 

திருச்சி சமயபுரம் அருகே இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சிவநேசன், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.

சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக சிவநேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவர் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுப்பதற்காக போலீசார் அவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது சிவநேசன், போலீசாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி சமயபுரம் காவல் ஆய்வாளர் அவரின் கணுக்காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த சிவநேசன் உடனடியாகப் பிடிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவலரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தப்ப முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.