திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு... அரசிதழ் வெளியீட்டில் சர்ச்சை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிழை தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். நடைபெற்ற தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலுமே அவர் அமோக வெற்றி பெற்றார்.

சட்டமன்ற விதிகளின்படி ஒரு உறுப்பினர் ஒரு தொகுதியை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு அரசு தற்போது அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட இந்த அரசு அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போதைய சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆனால், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பெயருக்குப் பதிலாக, முன்னாள் சபாநாயகர் அப்பாவுவின் பெயர் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு வெளியீட்டில் தற்போதைய சபாநாயகரின் பெயரைச் சரியாகக் குறிப்பிடாமல் விடுத்த இந்தத் தவறு, அதிகாரிகள் தரப்பில் நடந்த கவனக்குறைவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முதல்வர் வெற்றி பெற்று ராஜினாமா செய்த தொகுதியில், சபாநாயகர் பெயர் மாற்றிக் குறிப்பிடப்பட்ட இந்தச் சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
