கொடுத்த கடனை திரும்பக் கேட்ட பெண் பேராசிரியர் கொலை! திருச்சியில் தம்பதி கைது!

 
thenkasi

 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொடுத்த கடனை திரும்பக் கேட்கச் சென்ற பெண் பேராசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.துறையூர் அருகே கீரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா (36). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், காளிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், தனக்குத் தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததுடன், சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

துறையூர் கண்ணனூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சுமதி–துரைராஜ் தம்பதியினருக்கு சுகன்யா பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ம் தேதி கடன் மற்றும் சீட்டு பணத்தை வசூலிப்பதற்காக சுகன்யா அவர்களது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அப்போது சுகன்யாவுக்கும் தம்பதியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகன்யாவை இரும்புக் கம்பியால் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தம்பதி மீது குற்றச்சாட்டு உள்ளது.பின்னர் அவரது உடலை கரட்டாம்பட்டி அருகே உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சுகன்யா வீடு திரும்பாததால் அவரது தந்தை மனோகரன் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 24-ம் தேதி கரட்டாம்பட்டி பாலத்தின் அடியில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஆம்புலன்ஸ்

இதையடுத்து சுமதி–துரைராஜ் தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சுகன்யா காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரை பெறுவதில் போலீசார் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து துறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.