பெங்களூரு விமான நிலையத்தில் IndiGo விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையில் உரசியது!

 
இண்டிகோ விமானம் திருச்சி

 

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய IndiGo விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையைத் தொட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.Guwahati-யில் இருந்து பெங்களூரு நோக்கி IndiGo விமானம் 6E 6542 நேற்று இயக்கப்பட்டது. இந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தை நெருங்கியபோது முதல் முறையாக தரையிறங்க முயன்றது. அப்போது தரையிறக்கத்தை கைவிட்டு மீண்டும் மேலே எழுந்து செல்லும் go-around நடைமுறையை மேற்கொண்டது.

இதையடுத்து விமானம் 2-வது முறையாக தரையிறங்க முயன்றபோது, அதன் பின்பகுதி ஓடுபாதையைத் தொட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானம் தொடர்ந்து பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களும் பத்திரமாக வெளியேறியதாக IndiGo தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை விமான நிறுவனம் “Abnormal Runway Contact” என குறிப்பிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது பெங்களூருவில் காற்று வேகமாக வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காற்றின் வேகத்துக்கும் சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட விமானம் உடனடியாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப வல்லுநர்களால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான அனுமதிகள் கிடைத்த பிறகே அந்த விமானம் மீண்டும் இயக்கப்படும் என IndiGo தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணையை தொடங்கியுள்ளது. விமானம் முதல் முறையாக ஏன் தரையிறக்கத்தை கைவிட்டது, அதன் பின்னர் ஏற்பட்ட சம்பவத்திற்கான காரணங்கள் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூரு விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளிலும் இந்த சம்பவத்தால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.