திருச்சி ஜல்லிக்கட்டு.. காளை முட்டியதில் +2 மாணவர் பலி; 59 பேர் காயம்!

 
ஜல்லிக்கட்டு

திருச்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இந்தப் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கரூர் மாவட்டம், ராச்சாண்டார் திருமலை அழகாபுரத்தைச் சேர்ந்த இளையராஜாவின் மகன் பிரதீப் (16). பிளஸ் 2 படித்து வந்த இவர், தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க திருச்சிக்கு வந்துள்ளார்.

திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு

போட்டியின்போது ஒரு காளை சீறிப்பாய்ந்து வந்ததில், பிரதீப் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் மொத்தம் 706 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 306 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்க முயன்றனர். காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரர்கள் உட்பட மொத்தம் 59 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், புல்லட், பைக் மற்றும் டிராக்டர் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், இளம் மாணவர் ஒருவர் உயிரிழந்தது பார்வையாளர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.