அரசு பள்ளிக்குள் புகுந்த லாரி! சுற்றுச்சுவர் இடிந்து 9 மாணவர்கள் காயம்.. 4 சைக்கிள்கள் சேதம்!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு லாரி பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததாக கூறப்படும் சம்பவத்தில், 7-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் காயமடைந்தனர்.திருச்சியிலிருந்து நாமக்கல் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலையோரத்தில் இருந்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில் லாரி மோதியது.

மோதிய வேகத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகே நின்றிருந்த 7-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த மாணவர்களை உடனடியாக மீட்டு தொட்டியம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சைக்கிள்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பள்ளி நேரத்தில் லாரி சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு வளாகத்திற்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படும் டிரைவர் ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லாரி எதனால் கட்டுப்பாட்டை இழந்தது, விபத்தின் போது அதன் வேகம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
