திருச்சி சிவா குடும்பம் மீது ரூ.10 லட்சம், 50 சவரன் நகை மோசடிப் புகார்!
திமுக மூத்த தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் குடும்பத்தினர் மீது பல லட்ச ரூபாய் பண மற்றும் நகை மோசடிப் புகார் பதிவாகியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் பி. மேரி என்பவர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகன் மீது இந்த புகாரை அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் மேரி தனது புகாரில், திருச்சி சிவாவின் மகளான காயத்ரி மற்றும் அவரது கணவரான கராத்தே முத்துக்குமார் ஆகிய இருவருடனும் தங்களுக்கு நீண்ட நாட்களாகக் குடும்ப ரீதியான நட்பு இருந்து வந்துள்ளது.
இந்த பழக்கத்தைப் பயன்படுத்தி, தங்களின் அவசரத் தேவை என்று கூறி மருத்துவர் மேரியிடமிருந்து பல்வேறு தவணைகளாகச் சுமார் ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் குடும்பத்திற்குச் சொந்தமான 50 சவரன் தங்க நகைகளைத் தற்காலிகத் தேவைக்காகக் கேட்டு அவர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

பணத்தையும் நகையையும் பெற்றுக்கொண்டு நீண்ட நாட்களாகியும் அவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர் மேரி, இது குறித்து அவர்களிடம் நேரில் சென்று கேட்டுள்ளார்.
"கொடுத்த பணத்தையும் நகையையும் நேரில் சென்று கேட்டபோது, திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் மருமகன் முத்துக்குமார் ஆகிய இருவரும் தங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாகப் பெண் மருத்துவர் மேரி தனது புகாரில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்."
பெண் மருத்துவரின் இந்த புகாரின் அடிப்படையில், சென்னை அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
