மயானத்துக்குச் செல்ல வழியில்லை… தண்ணீர் ஓடும் வாய்க்காலில் சடலத்தைச் சுமந்த மக்கள்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, வாய்க்காலைக் கடக்கப் பாலம் இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களும் பொதுமக்களும் தண்ணீருக்குள் இறங்கி சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் பகுதியில் உள்ள தட்டான்குளம் வாய்க்காலைக் கடந்து மயானத்துக்குச் செல்ல முறையான பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்களும் பொதுமக்களும் எடுத்துச் சென்றபோது, வாய்க்காலைக் கடக்க வேறு வழியில்லாததால் தண்ணீருக்குள் இறங்கினர்.
பின்னர் தண்ணீர் ஓடும் வாய்க்காலில் இறங்கி, ராஜசேகரனின் உடலைத் தோளில் சுமந்தபடி மறுகரைக்குக் கொண்டு சென்றனர். இந்தக் காட்சிகள் காண்போரை வேதனையடையச் செய்துள்ளன.தட்டான்குளம் வாய்க்காலில் உடனடியாகப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும், இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
