இலவச பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்ட தலைமை ஆசிரியை... அதிரடி நடவடிக்கை!

 
பாடப்புத்தகம்

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பாடப்புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

முதல் பருவத் தேர்வு முடிவடைந்து, இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், மாணவர்களிடம் இருந்து முதல் பருவப் புத்தகங்களை தலைமை ஆசிரியை மஞ்சுளா திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவற்றை பழைய பேப்பர் வியாபாரியிடம் எடைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம், பள்ளியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவே பழைய புத்தகங்களை விற்பனை செய்ததாக அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியை மஞ்சுளாவைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்