திருச்சி அருகே கோர விபத்து.. லாரி மீது கார் மோதி 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.துவரங்குறிச்சி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த மோகன் குமார் (70), அஞ்சனா (37) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் லாரி, கார் ஓட்டுநர்களின் நிலை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
